மீன்வளம், சுகாதாரத்துறையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை: தமிழகத்தில் மீன்வளம் மற்றும் சுகாதார துறையில் புதிய தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். புதுடெல்லி பிரகதி மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவிலான டிஜிட்டல் இந்திய மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் “கடைசி மைல் இணைப்பு” என்று சொல்வோம் - அனைத்து கிராமங்களுக்கும் இண்டெர்நெட் சேவைகள் தடையின்றி கிடைப்பதற்கான முயற்சி, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் பங்கேற்ற தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: நம் மீனவர்கள் காணாமல் போகின்ற நேரத்தில் அவர்களை கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல் தொடர்கிறது. அவற்றிற்கான தீர்வு காண சில தொழில்நுட்பங்களை நான் இங்கு பார்வையிட்டேன். உண்மையிலேயே சிறந்ததாக இருக்கிறது. அதை தமிழ்நாட்டில் நடைமுறை படுத்துவதற்கு அங்க இருக்கக்கூடிய மீன்வள துறை அமைச்சரோடு பேசி அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க உள்ளோம். இதேப்போன்று மருத்துவத்துறை துறையில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டிருக்கிறது. பல கண்டுபிடிப்புகள் மிக சிறப்பாக இருக்கிறது. அவற்றையும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சரிடம் பேசி எடுக்கக்கூடிய வாய்ப்புகள் விரைவில் இருக்கிறது.

இன்று ஆளில்லா விமான தொழில்நுட்பம் விவசாயம் போன்ற துறைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு, அதேப்போன்று காவல் துறையில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது போன்றவற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தொழில் துறையில் இயந்திர மனித தொழில்நுட்பம் (ரோபோட்டிக்) பயன்பாட்டு அது அதிகம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு துறைகள் மூலமாக என்ன வாய்ப்புக்களை பயன்படுத்த முடியும் என்பதை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். அது மட்டுமல்ல, இன்றைக்கு பல்வேறு நாடுகளில் இருக்கிற பெஸ்ட் பிராக்டீஸ் அவற்றையெல்லாம் தமிழகத்திற்கு கொண்டு வந்து தமிழகத்தை டிஜிட்டல் சேவைகளில் முதல் வரிசையில் வைக்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் அவர்களுடைய கனவுகளை இந்த துறை நிச்சயமாக  நினைவாக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதில், முதன்மை செயலாளர் நீரஜ் மித்தல் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: