காலை உணவு, புதுமை பெண் திட்டங்கள் அரசு பஸ்களில் விளம்பரம்: பொதுமக்களிடம் கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: புதுமைப் பெண், காலை உணவுத் திட்டம் போன்ற அரசின் நலத்திட்டங்களைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில், அதுகுறித்த விளம்பரங்கள் அரசுப் பேருந்துகளில் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துத்துறைக்கு சொந்தமாக சென்னை, விழுப்புரம், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் விரைவு, ஏசி, டீலக்ஸ், இடைநில்லா பேருந்து, சாதாரணம் போன்ற வகையிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக தினசரி 1.55 கோடி மக்கள் பயணம் செய்ய முடிகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண திட்டங்களின் மூலம் அரசு பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரசின் திட்டங்களைப் பிரபலப்படுத்தும் வகையில் பேருந்துகளில் தற்போது விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. அதாவது பெண்கள் உயர் கல்வியைத் தொடரும் வகையில், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் மாணவிகள் தரப்பில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதுபோல் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த திட்டம் இல்லத்தரசிகள் மற்றும் ஆரம்பப் பள்ளி மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த திட்டம் தொடர்பாகப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன. பேருந்தின் வெளிப்புறம் முழுவதும் இந்த திட்டங்கள் குறித்து விளம்பரப் படுத்தப்பட்டுள்ளன.

Related Stories: