தமிழ்நாடு அரசின் முயற்சியால் விளையாட்டில் சாதனை: மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: தேசிய விளையாட்டுப் போட்டிகளில் அசத்தி வரும் தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் நடந்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் உள்ளிட்ட நகரங்களில் நடந்து வரும் போட்டிகளில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து 380 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரை நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இவ்வளவு வீரர்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பியதில்லை. இதனால் தமிழக வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற்கு ஏற்றவாறு தமிழக வீரர்கள் களத்திலும் அசத்தி வருகின்றனர். மகளிர் போல்வால்ட் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ரோசி மீனா 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் போல்வால்ட் பந்தயத்தில் தமிழக வீராங்கனைகள் பவித்ரா வெள்ளி, பாரனிகா வெண்கலப்பதக்கம் வென்றனர். அதேபோல் மகளிர் 100 மீ, ஓட்டத்தில் மதுரையைச் சேர்ந்த அர்ச்சனா வெள்ளி வென்று அசத்தினார்.

3வது நாள் போட்டி முடிவில் தமிழ்நாடு 8 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், 4-வது நாளான நேற்று தமிழகத்துக்கு மேலும் 8 பதக்கம் கிடைத்தது. இதனால் மொத்தமாக 12 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என்று மொத்தமாக 33 பதக்கங்களை வென்று தமிழ்நாடு அணி நான்காவது இடத்தில் உள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

*மு.க.ஸ்டாலின் ட்வீட்

தமிழக அரசு மற்றும் பல்வேறு விளையாட்டு சங்கங்கள் மேற்கொண்ட முயற்சியின் மூலம், தேசிய விளையாட்டு போட்டிக்கு தமிழகம் சார்பில் 380 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளோம். 12 பதக்கங்களை வெற்றி பெற்று தமிழ்நாடு 4-வது இடத்தில் உள்ளது. எங்கள் விளையாட்டு வீரர்கள் மேலும் பதக்கங்களை வெல்ல வாழ்த்துகிறேன். நமது விளையாட்டு சூப்பர் ஸ்டார்களை வரவேற்க காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: