×

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு திட்டம்; ‘பிஎச்டி’ஆய்வு மாணவர்களுக்கு பொருந்தாது: பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு

புதுடெல்லி: ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்கும் திட்டமானது, பிஎச்டி மாணவர்களுக்கு பொருந்தாது என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில், ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளைத் தொலைதூர கல்விமுறை மூலமாகவோ, ஆன்லைன் முறையிலோ அல்லது பகுதிநேரமுறை மூலமாகவோ தொடரலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது.

இந்நிலையில் இந்தியாவின் உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஜெகதேஷ் குமார், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ‘பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகளின்படி, பிஎச்டி ஆய்வுப் படிப்பைத் தொடரும் மாணவர்கள், ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இருந்தாலும் டிப்ளமோ, இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளின் மாணவர்கள், கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை நேரடி சேர்க்கை அல்லது திறந்தவழி அல்லது தொலைதூர முறையில் தொடர முடியும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து கல்வி நிறுவனங்களும் வகுக்க வேண்டும். இந்த புதிய உத்தரவானது பிஎச்டி படிப்பை தவிர மற்ற பட்டப் படிப்பை தொடரும் மாணவர்களுக்கு பொருந்தும்.

பிஎச்டி படிப்பை தேர்வு செய்த மாணவர்கள், அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் தனித்துவமான அறிவை வெளிப்படுத்த வேண்டும் என்பதாலும், அவர்கள் தங்களது படிப்பு சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதாலும் அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டிப்படிப்புகளை தொடர முடியாது’ என்று கூறினார்.

Tags : Two concurrent degree program; Not applicable to ‘PhD’ thesis students: University Grants Commission notification
× RELATED மீண்டும் வாக்குச் சீட்டு முறை...