பயண நேரத்தை குறைத்து நாகர்கோவில் - பெங்களூரு எக்ஸ்பிரசை சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்ற வேண்டும்: தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் -  பெங்களூரு எக்ஸ்பிரசை சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென் மாவட்ட மக்கள் பயன்படும் விதத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நாகர்கோவிலிருந்து  திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், நாமக்கல், ஓசூர் வழியாக பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு  வருகிறது.

இந்த ரயில் குமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் இருருந்து புறப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி,  விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி,  கிருஷ்ணகிரி என 11 மாவட்டங்கள் வழியாக பயணித்து  பெங்களூரு சென்றடைகிறது. இந்த ரயில் மட்டுமே  தமிழகத்தில்  உள்ள அதிக பகுதி பயணிகள் பயன்படும் படியாக இயக்கப்படும் ரயில் ஆகும். ஆகையால் இந்த ரயிலுக்கு மற்ற ரயில்களை  காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து  இயக்க வேண்டும் என்ற கோரிக்கை  தென் மாவட்ட பயணிகளால் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் பெங்களூரு சிட்டி ஜங்ஷன் ரயில்  நிலையத்தில் இருந்து சமீபத்தில் மாற்றம் செய்து பெங்களூரு பையப்பன ஹள்ளியில் புதிதாக திறக்கப்பட்ட சர்.எம். விஸ்வேசுவரய்யா ரயில் முனையத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது. நேற்று (ஞாயிறு) முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்தது. இந்த புதிய ரயில் நிலையம் விமான நிலையம் போன்று முற்றிலும்  ஏசி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சிட்டி ரயில்  நிலையத்தில் நிலவும் இட நெருக்கடி காரணமாக இந்த ரயில் மாற்றம்  செய்யப்பட்டு உள்ளதாக கூறி உள்ளனர். ஆனால் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள பெங்களூரு  சிட்டி ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது பயணிகளுக்கு மிகவும் சிரமத்தை கொடுத்துள்ளது.

இந்த சிரமத்தை போக்கும் வகையில் ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தும் விதமாக  இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்து இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவிலிருந்து இருந்து இரவு 7.30க்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலையில் 9.20க்கு பெங்களூரு சென்று சேர்கிறது. இவ்வாறு கால தாமதமாக செல்வதால் இந்த ரயிலில் பள்ளி, கல்லூரி, வேலைவாய்ப்பு என்று பல்வேறு பணிகள் நிமித்தம்  செல்லும் பயணிகள் அரை நாள் விடுமுறை எடுக்க வேண்டியுள்ளது.

மறுமார்க்கமாக  இந்த ரயில் பெங்களூருவில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படுகிறது. இவ்வாறு  சீக்கிரம் புறப்படுவதால் அலுவலக பணிகளை முடித்து இந்த ரயிலில் பயணம் செய்ய  முடியாத நிலை உள்ளது. இந்த ரயிலின் முனையம் மாற்றப்பட்டதால் முனைய  இடநெருக்கடி பிரச்சனை இல்லை என்பதால் இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம்  செய்வதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்பதை ரயில்வே அதிகாரிகள்  கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறி உள்ள பயணிகள் சங்கத்தினர், இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம்  செய்து பெங்களூருவில் இருந்து மாலை 6.30 மணிக்கு பிறகு புறப்படும் வகையில் காலஅட்டவணை அமைத்தும், மறு மார்க்கத்தில் பெங்களூருக்கு காலை 7 மணிக்கு  சென்று சேருமாறும் கால அட்டவணை அமைத்து வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை  கணிசமான அளவில் குறைத்து சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம் செய்து இயக்க  வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.  இவ்வாறு  சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம் செய்து இயக்கும் போது ரயில்வே துறையின்  வருவாயில் கணிசமான அளவில் அதிகரிக்கும் என்றும் பயணிகள் கூறி உள்ளனர்.

Related Stories: