ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பொரி தயாரிக்கும் பணி தீவிரம்: மூட்டைக்கு ரூ.100 விலை உயர்வால் மகிழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 10க்கும் மேற்பட்ட அரிசி பொரி தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இங்கு தயாராகும் பொரியை தென் தமிழகத்தில் மதுரை, விருதுநகர், தேனி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். நாளை 4ம் தேதி ஆயுதபூஜை வருவதால் திண்டுக்கல் பகுதியில் தற்போது பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த பொரி தயாரிப்பாளர் மகாராஜன் கூறுகையில், இந்தியா முழுவதும் நாளை 4ம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 வருடங்களாக  கொரோனா காரணமாக ஆயுதபூஜை கொண்டாடவில்லை. ஆனால் இந்த வருடம் ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் இருந்து பொரிக்கான அரிசி திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு அரிசியை உப்புத் தண்ணீரில் ஊற வைத்து, அதனை நன்கு காயவைத்து அதன்பின் வறுத்து பொரி தயாரிக்கப்படுகிறது.

 

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக ஆயுதபூஜை நேரத்தில் நாள் ஒன்றுக்கு 2 டன் அளவில்  பொரி உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் இரவு பகலாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 டன் வரை பொரி உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த வருடம் 100 லிட்டர் பொரி மூட்டை 350க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.450க்கு விற்பனையாகிறது.  மூடைக்கு 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால், பொரி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: