ஒகேனக்கல்லில் 16 ஆயிரம் கனஅடி நீர்வரத்து: மேட்டூர் அணை நீர்மட்டம் 118.65 அடியாக சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,910 கன அடியாக உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 118.65அடியாக சரிந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று நீர்வரத்து 14,000 கனஅடியாக நீடித்த நிலையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 16,000கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டாலும், பராமரிப்பு பணிகள் காரணமாக, அருவியில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 11,146 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 16,484கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 13,910கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று மாலை முதல் நீர்திறப்பு 15ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட நீர் திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று காலை 118.75அடியாக இருந்த நீர்மட்டம் மாலை 118.78அடியாகவும் இன்று காலை 118.65அடியாகவும் சரிந்தது. நீர் இருப்பு 91.33டிஎம்சியாக உள்ளது.

Related Stories: