உதகை தாவரவியல் பூங்காவில் 2ம் சீசனுக்கான மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் வனத்துறை அமைச்சர்: சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பு

நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் 2ம் சீசனுக்கான மலர் கண்காட்சி தொடங்கியிருப்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. ஆயிரக்கணக்கானோர் உதகையில் திரண்டு இருப்பதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை 2ம் சீசன் காலமாகும். அப்போது நிலவும் மிதமான காலநிலையில் உதகையில் உள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்க சுமார் 5 லட்சம் பேர் வருகை தருவர். இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் உதகை தாவரவியல் பூங்காவில் 2ம் சீசனுக்கான மலர் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் நீலகிரி ஆட்சியர் அம்ரித் ஆகியவர்கள் திறந்து வைத்தனர்.

புகழ்பெற்ற மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளின் உள்ளங்களை கொள்ளையிடுவதாக 30 வகையான மலர்களை கொண்ட 10 ஆயிரம் மலர் தொட்டிகள் அலங்கார மேடைகளில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இத்துடன் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆர்கானிக் மலர் அலங்காரமும், தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக 5 ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டு மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட மலர் அலங்காரமும் வைக்கப்பட்டுள்ளன. காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

Related Stories: