ஆன்லைனில் ஆர்டர் செய்த ‘பீட்சா’வில் வெள்ளைப் புழு, தலைமுடி: உணவு நிறுவனத்திற்கு 12% வட்டியுடன் ரூ.7,000 அபராதம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரைச் சேர்ந்த ஹர்கிரத் சிங் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு ஜூலையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்திடம் ‘பீட்சா’ ஆர்டர் செய்திருந்தார். அதன்படி டெலிவரியும் செய்யப்பட்டது. பார்சலை பிரித்து பார்த்து, பீட்சாவை எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, ​​அதில் வெள்ளைப் புழுக்களும், தலைமுடி ஒன்றும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அந்த பீட்சாவை விற்பனை செய்த உணவு டெலிவரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். எதிர்முனையில் பேசிய உணவு டெலிவரி நிறுவனத்தினர், பீட்சாவில் புழு, தலைமுடி இருந்ததற்கு சாக்குபோக்கு காரணங்களை கூறினர். அவர்களின் பதிலில் ஹர்கிரத் சிங் திருப்தியடையவில்லை. அன்றைய தினம் மாலை அவருக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது. மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

​அவருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்திற்கு இ-மெயிலில் புகார் அனுப்பினார். அவர்கள் அதற்கும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. அதையடுத்து சண்டிகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் மற்றும் உணவை சப்ளை செய்த ஓட்டல் ஆகிய இருவரும், வாடிக்கையாளருக்கான சேவையை சரியாக செய்யவில்லை எனக்கூறி, பாதிக்கப்பட்ட ஹர்கிரத் சிங்கிற்கு இழப்பீடாக ரூ.7,000-ஐ 12 சதவீத வட்டியுடன் 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Related Stories: