சிஆர்பிஎப் தலைமையக கட்டுமான இடத்தில் கடவுளின் பெயரால் 6 வயது சிறுவனை கழுத்தை அறுத்து பலியிட்ட தொழிலாளர்கள்: தலைநகர் டெல்லியில் பயங்கரம்

புதுடெல்லி: டெல்லியில் சிஆர்பிஎப் தலைமையக கட்டுமான இடத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் கடவுளின் பெயரால் கழுத்தை அறுத்து பலியிட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 2 தொழிலாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைநகர் டெல்லியின் லோதி காலனி பகுதியில் மத்திய ரிசர்வ் படையின் (சிஆர்பிஎப்) தலைமையக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, கட்டுமான பணிகள் நடக்கும் பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கட்டுமானப் பணிகள் நடக்கும் கட்டிடத்தின் ஒருபகுதியில் சிறுவன் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட நிலையில் கிடந்தான். அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கட்டுமானப் பணி நடக்கும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள், கட்டுமான தொழிலாளர்கள் இருவரை பிடித்து டெல்லி போலீசில் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து டெல்லி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவரின் 6 வயது மகன், கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த விஜய் குமார் மற்றும் அமன் குமார் ஆகியோரால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டான். இவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுவனின் குடும்பத்துடன் எந்த விரோதமும் இல்லை.

ஆனால் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் இருந்த தற்காலிக கொட்டகைக்கு சிறுவனை குற்றவாளிகள் அழைத்து சென்று கொலை செய்துள்ளனர். கொலையாளிகளில் ஒருவன் கூறிய வாக்குமூலத்தில், கடவுளின் உத்தரவின் பேரில் சிறுவனை கழுத்தை அறுத்து கொன்றதாக கூறினான். கடவுளின் விருப்பப்படி சிறுவனை பலியிட்டதாக கூறினான். இருவரையும் கைது செய்துள்ளோம். இருந்தும் ‘சைக்கோ’த்தனமான இவர்களது செயல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: