ஆவடி அருகே மர்ம நபர்கள் அட்டூழியம்: மூதாட்டி சரமாரி வெட்டி கொலை

ஆவடி: ஆவடி அருகே நேற்றிரவு ஒரு மூதாட்டியை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சொத்து பிரச்னையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர்.

ஆவடி அருகே பொதிகை நகர், பவானியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சாவித்திரி (72). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் இந்த வீட்டில் சாவித்திரி தனியே வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆவடி அருகே கண்ணம்பாளையம், கோவர்த்தனகிரி பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

சாவித்திரியின் வீட்டில் 3 குடும்பத்தினர் வாடகைக்கு இருந்து வருகின்றனர். இந்த வருமானத்தில்தான் சாவித்திரி குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று மாலை மூதாட்டி சாவித்திரி வசித்த வீட்டில் இருந்து அதிகளவில் எறும்புகள் வருவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அவரது மகள்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரது 2 மகள்கள் வீட்டுக்கு விரைந்து வந்தனர். அங்கு படுக்கையறையில் சாவித்திரி தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து 2 மகள்களும் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி போலீசார் நேற்றிரவு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், நேற்று மாலை சாவித்திரியின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் அத்துமீறி புகுந்து, அவரது தலையில் அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

பின்னர் சாவித்திரியின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர். மேலும், சொத்து தகராறு காரணமாக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தனிப்படை அமைத்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: