கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்த ஒப்பந்த தூய்மை பணியாளர் 1000 பேர் கைது: 2வது நாளாக போராட்டம்

கோவை: கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென குவிந்த 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கூலி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

ஏற்கனவே, கோரிக்கை மற்றும் வேலை நிறுத்தம் தொடர்பாக கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் உள்பட பலருக்கும் முன் அறிவிப்பு கொடுத்தனர். மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தலைமையில் 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அது தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது. இதையடுத்து திட்டமிட்டபடி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். கோவை நகரில் 3,500 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதனால், அரசு மருத்துவமனைகள், நகர பகுதிகளில் சுகாதார பணிகள் பாதித்து குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோவை மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று திரண்டனர். இன்று காலை ஆயிரக்கணக்கான ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.

அவர்கள் ரயில் நிலைய சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஒன்று கூடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தூய்மை பணியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: