8 மாவட்டங்களில் 900 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் விட நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் உள்ள 900 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் விடும் பணியை நிர்வாகம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர் அறிவிப்பை கடந்த ஆகஸ்டு மாதம் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டது. அதில் தற்போது உரிமம் பெற்று பார்களை நடத்தி வருபவர்கள், புதிதாக உரிமம் பெறும் நபர்களுக்கு அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த பார் உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி அனிதா சுமந்த், 8 மாவட்டங்களில் ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்ட டாஸ்மாக் பார் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள 900 டாஸ்மாக் பார்களுக்கும் விரைவில் மறு ஏலம் விடுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இந்த முறை நடைபெறும் டெண்டரை முறைகேடு இல்லாமல் நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர் நல சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, புதிய டெண்டர் அறிவிப்பின் போது டாஸ்மாக் பார் கட்டிடத்துக்கு தடையில்லா சான்று கட்டாயம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஒரு மாதம் பார்கள் மூடிக் கிடந்ததால் அரசுக்கு ரூ.11 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு பார் உரிமையாளர்களுடன் கலந்து பேசி டாஸ்மாக் நிர்வாகம் டெண்டர் விடும் விஷயத்தில் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே பார் உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏற்கனவே பார் உரிமம் பெற்றவர்களிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு பார்களை நடத்துவதற்கு அவர்களுக்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் மேலாளரிடம் பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: