அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வாலிபர் கழுத்து நெரித்துக்கொலை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பாகலூர் செல்லும் சாலையில் உள்ள உலியாளம் கிராமத்தில் தனியார் லேஅவுட்டில் கட்டுமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பீகார் மாநிலம் மொஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிவிஜிகுமார்(22), பங்காஜூ பசுவான்(25) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் ஒப்பந்த பணியாளராக தேன்கனிக்கோட்டை அருகே தொழுவப்பெட்டா கிராமத்தை சேர்ந்த ஒப்பந்ததாரரான ஜெயக்குமார்(27) என்பவர் பணியமர்த்தியுள்ளார்.

இருவரும் அதேபகுதியில் ஒரே அறையில் தங்கியுள்ளனர். இதனிடையே இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிவிஜிகுமார் ஜெயக்குமாருக்கு போன் செய்தார். அப்போது பங்காஜூ பசுவானை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். இதையடுத்து ஜெயக்குமார் அங்கு விரைந்து வந்தார். இருவரும் பங்காஜூ பசுவானை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது,  தங்கியிருக்கும் அறையின் அருகேயுள்ள முட்புதரில் பங்காஜூ பசுவான் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த பாகலூர் போலீசார் விரைந்து வந்து பங்காஜூ பசுவானின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. பின்னர் அவருடன் தங்கியிருந்த சிவிஜிகுமாரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் பங்காஜூ பசுவானை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. பீகாரில் இருக்கும் சிவிஜிகுமாரின் அண்ணியுடன் பங்காஜூ பசுவானுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சிவிஜிகுமார் அவரை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இதனிடையே கடந்த 3நாட்களுக்கு முன், சிவிஜிகுமார் , பங்காஜூ பசுவானை வேலைக்கு ஓசூருக்கு அழைத்து வந்துள்ளார்.

நேற்றிரவு மீண்டும் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆவேசமடைந்த சிவிஜிகுமார், பங்காஜூ பசுவானின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணையில் கூறியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  பங்காஜூ பகவானிடம் போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: