கரூரில் காந்தி ஜெயந்தி அன்று சட்ட விரோதமாக மது விற்பனை: பெண் உட்பட 72 பேர் கைது.. 523 மதுபாட்டில்கள் பறிமுதல்..!!

கரூர்: கரூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பெண் உட்பட 72 பேரை கைது செய்த போலீசார், 523 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அரசு விடுமுறை நாட்களில், குறிப்பிட்ட விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது. மேலும், மதுவிற்பனையும் அன்று தடை செய்யப்படும். காந்தி ஜெயந்தியான நேற்று தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தும் மூட வேண்டும். அதனை மீறி மதுவிற்பனை நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில் கரூர் மாவட்ட காவல்துறையினர் சார்பில் காவல் ஆய்வாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கரூர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதனிடையே நேற்று ஒரேநாளில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்றதாக பெண் உட்பட 72 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 523 மதுபாட்டில்களும், இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அரசு உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: