தாம்பரம் அருகே பயங்கரம்; கள்ளக்காதலியின் பெற்றோர் வெட்டி கொலை: தலைமறைவான கள்ளக்காதலன் உள்பட 2 பேருக்கு வலை

தாம்பரம்: தாம்பரம் அருகே கள்ளக்காதலியின் பெற்றோரை அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்ற கள்ளக்காதலன் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தாம்பரம் அருகே ஜமீன் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). பூ வியாபாரி. இவரது மனைவி மஞ்சுளா (45). இத்தம்பதிக்கு ராஜேஷ் என்ற மகனும் வசந்தி, அமுலு என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வந்துள்ளனர். இதற்கிடையே ஆறுமுகத்தின் மகள் வசந்தியும் அவரது கணவர் சம்பத்தும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசந்தி வசித்து வந்திருக்கிறார். ஆறுமுகத்தின் மற்றொரு மகள் அமுலு, மாங்காடு பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். மகன் ராஜேஷ், ஜமீன் ராயப்பேட்டை பகுதியில் தனது மனைவியுடன் தனியே வசித்து வருகிறார். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலமாக, சென்னை அண்ணாநகரை சேர்ந்த மோசஸ் (35) என்பவருடன் வசந்திக்கு நட்பு ஏற்பட்டது.

பின்னர் இருவரும் நெருக்கமாகி, ஆறுமுகத்தின் வீட்டில் தனியே உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மகளின் கள்ளக்காதலை வசந்தியின் பெற்றோரான ஆறுமுகம்-மஞ்சுளா தம்பதி அறிந்து கண்டித்ததால், அவர்களுக்கு குடிப்பழக்கத்தை மோசஸ் அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் 3 பேரும் அதே வீட்டில் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அதே பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன் வாடகைக்கு வீடு எடுத்து, மோசஸ்-வசந்தி ஆகியோர் தனியே வசித்து வந்துள்ளனர்.

அப்போது மோசஸ் குடிபோதையில் வசந்தியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கடந்த 30ம் தேதி தனது 2 குழந்தைகளுடன், மாங்காட்டில் உள்ள சகோதரி அமுலு வீட்டுக்கு வசந்தி சென்றுவிட்டார். அன்றிரவு வசந்தியை தொடர்பு கொண்ட கள்ளக்காதலன் மோசஸ், நீ வீட்டுக்கு வராவிட்டால், உனது பெற்றோரை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

எனினும் வசந்தி வராததால், தனது வீட்டுக்கு வசந்தியின் பெற்றோரை மோசஸ் அழைத்து வந்துள்ளார். பின்னர் மோசஸ், ஆறுமுகம், மஞ்சுளா ஆகிய 3 பேரும் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தனது பெற்றோரை கடந்த 2 நாட்களாக வசந்தி செல்போனில் அழைத்தும் எடுக்காததால் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தனது சகோதரர் ராஜேஷை வீட்டுக்கு சென்று பார்க்கும்படி வசந்தி கூறியுள்ளார்.

நேற்றிரவு மோசஸின் வீட்டுக்கு சென்று ராஜேஷ் பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தனது பெற்றோரான ஆறுமுகம்-மஞ்சுளா ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டு, அவர்களின் தலை, கழுத்து, முகம், தொடை உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் சிட்லப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஆறுமுகம், மஞ்சுளா ஆகிய இருவரின் சடலங்களை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, கடந்த 30ம் தேதி நள்ளிரவில் மோசஸ் உள்பட 2 பேர் வீட்டிலிருந்து பைக்கில் கிளம்பி செல்வது தெளிவாக பதிவாகியிருந்தது. இப்புகாரின்பேரில் சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். மேலும், தலைமறைவான மோசஸ் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: