கற்றல், கற்பித்தலுக்கு பெரிதும் துணைபுரிந்து வருகிறது வெற்றிநடை போடும் இல்லம் தேடிக் கல்வித்திட்டம்

*தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் பாராட்டு

மன்னார்குடி : கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உயிர்சேதம், பொருள்சேதம், பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது. இவையெல்லாம் பெரிய இழப்புகள் என்றாலும், இணைய வளர்ச்சி எல்லோருக்கும் கிடைக்காத நாடுகளான வளர்ந்து வரும் நாடுகள், வளர்ச்சி அடையாத நாட்டில் உள்ள மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளி என்பது ஒரு தலைமுறை இடைவெளியை ஏற்படுத்தும் என்று ஐ நாவின் குழந்தைகளுக்கான அமைப்பு கவலை தெரிவித்து இருந்தது.

தமிழ்நாட்டில் கற்றல் இடைவெளியை சரி செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி வைத்த அவரது கனவுத் திட்டம்தான் இல்லம் தேடிக் கல்வித் திட்டம். இத்திட்டத்தினை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் உள்ள கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் கிராமங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்திய பிறகு, இத்திட்டத்தினை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில், பட்டப்படிப்பு முடித்தவர்கள், 12ம் வகுப்பு படித்த தன்னார்வலர்கள் தாமாக முன் வந்து இல்லம் தேடிக் கல்வி செயலியில் பதிவு செய்து அதற்காக தேர்வினை எழுதி, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, மாநில அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்க பட்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

மாநில அளவில் 2 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.இத்திட்டத்தை மாநில, மாவட்ட, வட்டார அளவில் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் தினமும் மாலை நேரங் களில் மையங்களை பார்வையிட்டு திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு மாணவர்களையும், தன்னார்வலர்களையும் உற்சாகப்படுத்தியும், ஊக்கமூட்டியும் வருகிறார்கள்.

இல்லம் தேடி கல்வித்திட்டத்தை பன்னாட்டளவில் ஆய்வு செய்த கலிபோர்னியா பல்கலைக்கழகம் குறைந்த செலவில் பெரும் நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை சென்றடைந்து வெற்றிகரமாக கற்றல் இடைவெளியை குறைத்திட இத்திட்டம் உதவியுள்ளது என தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் மாநிலக் குழு உறுப்பினர் தங்கபாபு கூறுகையில், கொரோனா காலத்தில் கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த கல்வித் திட்டமானது மிக சிறப்பாக மாணவர்களிடம் மொழிப்பாடங்கள் கணித, அறிவியல் கருத்துக்களை உணர்வதற்கான வாய்ப்பினை வழங்கி உள்ளது. முன்பை விட மாணவர்கள் இப்பொழுது இந்த திட்டத்தின் மூலமாக நன்றாக எழுதுவதற்கும் படிப்பதற்கும் தயாராகி வருகின்றனர்.

மேலும், இது பள்ளியில் ஆசிரியர்கள் கற்பிப்பதற்கும் உதவிகரமாக இருக்கிறது. மிக முக்கியமாக மாணவர்கள் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் மகிழ்ச்சியாக பாடங்களை கற்கிறார்கள். மாலை நேரங்களில் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு பிஸ்கட், பால் போன்றவற்றை வழங்கினால் அந்த மாணவர்கள் மேலும் உற்சாகத்துடன் மையங்களுக்கு வருவார்கள் என்று கூறினார்.

திருவாரூர் மாவட்ட இல்லம் தேடி கல்வி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முரளி கூறுகையில், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலமாக மாணவர்கள் கணித அறிவியல் பாடகருத்துக்களை செயல்பாடுகளின் மூலமாக எளிமையாக கற்றுக் கொண்டுள்ளனர். நிறைய செயல்பாடுகளை மாணவர்களே உருவாக்குகின்றனர்.

தன்னார்வலர்களுடைய அர்ப்பணிப்பான உழைப்பால் கற்றல் கற்பித்தலுக்கான பல்வேறுபட்ட உபகரணங் களை அவர்கள் புதிய அணுகுமுறையுடன், புதிய சிந்தனையுடன் தயாரித்துள்ளார்கள். இது கற்றல், கற்பித்தலுக்கு பெரிதும் துணை புரிந்து வருகிறது என்றார். கோவில்திருமாளம் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் கூறுகையில், வசதி வாய்ப்புகளற்ற ஏழை எளிய குழந்தைகளுக்கு தனிவகுப்பு போன்ற உன்னத திட்டமாக \”இல்லம் தேடிக் கல்வி திட்டம்\” செயல்பட்டு வருகிறது. பள்ளியில் கற்றதை அன்று மாலையே மாணவர்கள் இம்மையத்தில் படிக்கின்றபொழுது கற்றலானது மனதில் நிலை நிறுத்தப்படுகிறது.

இதனால் கற்றக் கல்வி மறப்பதற்கான வாய்ப்பு குறைகிறது. இவ்வாறு பல நன்மைகள் கொண்ட இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு மதிப்பூதியத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.தமிழகத்தில் கல்வித்துறையில் புதுமைப்பெண், நானே முதல்வன், நம் பள்ளி- நம் பெருமை, சிற்பி என பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து அனைத்து தரப்பினரின் ஏகோபித்த ஆதரவினை தமிழக அரசு பெற்று வந்தாலும், இல்லம் தேடிக்கல்வித் திட்டம் உலக அளவில் கல்வியாளர்கள் கொண்டாடும் ஒரு அற்புதமான, ஆக்கப்பூர்வமான திட்டம் தான் தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டம்.

வீட்டுப்பாடம், தேர்வுக்கு தயார் செய்யும் பயிற்று இடம்...

பள்ளிக்  கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  சுந்தர்கூறுகையில், அகிலமே திரும்பி  பார்க்கிற அளவில் தமிழ்நாட்டை  ஆண்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சரின் வழி காட்டலின் படி நடைபெறும் இல்லம்  தேடிக் கல்வி திட்டமானது மாணவர்களின் வீட்டுப்பாடம், தேர்வுக்கு தயார்  செய்தல் ஆகியவற்றின் பயிற்று இடமாகத் திகழ்ந்து வருகிறது.

இல்லம்  தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மிகவும் ஆர்வமுடனும், அர்ப்பணிப்பு உணர்வோடும்  செயல்பட்டு இந்தத் திட்டத்தை வெற்றியடைய வைத்திருக்கிறார்கள். பள்ளியில்  ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள சூழ்நிலையில் பள்ளி மேலாண்மைக் குழு  மூலம் ஆசிரியர் நியமனம் செய்தது தொடர்ந்து இல்லம் தேடிக்கல்வி திட்டத்தை  அமல்படுத்துவது ஆகியன மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் ஆசிரியர்களுக்கும்  பேருதவியாக இருந்து வருகிறது என்றார்.

Related Stories: