குப்பையில்லா மாவட்டம் என்ற நிலையை அடைய சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும்

*எப்பநாடு ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தல்

ஊட்டி : நாம் இருக்கும் இடம் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்து குப்பையில்லா மாவட்டம் என்ற நிலையை அடைய ஒத்துழைக்க வேண்டும் என எப்பநாடு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்துள்ளார். ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எப்பநாடு ஊராட்சி சமுதாய கூடத்தில் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.இதில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கலைஞரின் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசுகையில், ஒவ்வொரு குக்கிராமமும் வளர்ச்சி அடைந்தால் தான் இந்தியா வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் என்பது காந்தியடிகள் கொள்கையாக இருந்தது. இந்த கிராம சபை கூட்டத்தில் மின்சார வசதி, அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம், சாலை போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

இவை அனைத்தும் கள ஆய்வு செய்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை நீங்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறை அலுவலர்களும், உள்ளாட்சித்துறை அலுவலர்களும் அரசு அறிவித்துள்ள திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும்.  

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீர் அடிப்படை வசதிகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகள் கடனுதவிகள், கிசான் கிரெடிட் கார்டு, கூட்டுறவுத்துறை சார்பில் கடனுதவிகள், அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகள் வயதிற்கேற்ற எடை மற்றும் உயரம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவு, கர்ப்பிணி தாய்மார்கள், வளர்இளம் பெண்களுக்கு இரும்பு சத்து மாத்திரை போன்றவைகள் வழங்கப்படுகின்றன. இதேபோல் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில் கிராமப்புற மக்களாகிய நீங்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள நம்ம ஊரு சூப்பரு என்ற இயக்கம் கிராமப்புறங்களில் துவங்கப்பட்டுள்ளது.

நாம் இருக்கும் இடம் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்து குப்பையில்லா மாவட்டம் என்ற நிலையை அடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.முன்னதாக எப்பநாடு உயர்நிலை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை கலெக்டர் நடவு செய்தார். தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு மருத்துவ பெட்டகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 3 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், தோட்டக்கலை இணை இயக்குநர் (பொறுப்பு) ஷிபிலா மேரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட வழங்கல் அலுவலர் முகமது குதுரத்துல்லா, ஊட்டி ஆர்டிஒ., துரைசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார், எப்பநாடு ஊராட்சி தலைவர் சிவக்குமார், பிடிஒ.,க்கள் சிவக்குமார், விஜயா உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

Related Stories: