ராணிப்பேட்டை அருகே தனியார் வங்கியில் இருந்த ஜெனரேட்டரில் திடீர் தீ விபத்து... தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு துறையினர்..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் அடுத்த காரை கூட்ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தனியார் வங்கியின் ராணிப்பேட்டை கிளை நீண்ட நாட்களாக செயல்பட்டு வருகிறது. பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக நாள்தோறும் இந்த வங்கிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் ஜெனரேட்டர் இருந்த மேல்தளத்தில் திடீரென புகை அதிகமாக வருவதை கண்ட காவலாளிகள் மேலே சென்று பார்த்தனர். அப்பொழுது ஜெனரேட்டர் தீப்பற்றி ஏரிந்தது.

பின்பு தீயானது சற்று நேரத்தில் மளமளவென அடுத்தடுத்து பரவியது. இதனால் உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவலாளிகளும் தீயை அணைக்க முயற்சித்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜெனரேட்டர் அருகே மின்சாரம் இருப்பதால் மற்ற பகுதிகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தினால் தீயை அணைக்கும் பணியானது சற்று தொய்ந்து காணப்படுகிறது. இருப்பினும் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி காணப்படுகிறது.

Related Stories: