ஓபிஎஸ்சுக்கு இ.பொ.செ பதவி தருவதாக கூறினோம் அதிமுக பிளவுபட திட்டம் தீட்டியவர் வைத்திலிங்கம்: மாஜி அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு

நாமக்கல்: அதிமுக ஒன்றாக இருக்கக் கூடாது என திட்டம் தீட்டியவர் வைத்திலிங்கம் என நாமக்கல்லில் மாஜி அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ பேசினார். நாமக்கல்லில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்எல்ஏ பேசியதாவது: அதிமுகவை அதிமுகவினரால் மட்டும் தான் வீழ்த்த முடியும். அதுதான் கடந்த சட்டமன்ற தேர்தலில் நடந்துள்ளது. அதிமுக பிளவுபடவும், ஒன்றாக இருக்கக்கூடாது எனவும் திட்டம் தீட்டியவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். அதிமுக ஆட்சிக்கு எதிராகவும் வாக்களித்தார். இருப்பினும் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஓபிஎஸ்சுக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது.

ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் ஆரம்பித்த பிரச்னை, யார் எதிர்க்கட்சி தலைவர் என்பது வரை நீடித்தது. எப்படியோ போராடி எடப்பாடியாரை எதிர்க்கட்சி தலைவராக ஆக்கினோம். ராஜ்யசபா எம்பி தேர்தலின் போது, வேட்பாளரை அறிவிக்க முடியாமல், ஓபிஎஸ் தாமதம் செய்தார். யாரை அறிவித்தாலும் அவர் குறுக்கீடு செய்தார். இதனால் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தினோம். அதில் 95 சதவீதம் பேர் எடப்படியார் வரவேண்டும் என விரும்பினர். ஆனால் வைத்திலிங்கம் அதிமுக பிளவுபடவும், ஒருங்கிணையாமல் தடுக்கவும் சூழ்ச்சி செய்தார். ஓபிஎஸ்சுக்கு இணை பொதுச்செயலாளர் பதவி தருவதாக கூறினோம். இது தொடர்பாக அவரிடம் பேச, பல முறை நான் சென்றேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் கூறி, பேச்சுவார்த்தையை தள்ளி வைப்பார். இறுதியாக அவரது மகள் வீட்டுக்கு வரச்சொன்னார்.

நான், நத்தம் விஸ்வநாதன் மற்றும் கட்சி முன்னணியினர் அங்கு சென்ற போது, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்றோர் இருந்தனர். ஆனால், ஓபிஎஸ் வரவில்லை. அவரை தொடர்பு கொண்டபோது, வைத்திலிங்கத்திடம் பேசும்படி கூறினார். ஆனால், வைத்திலிங்கம் நாங்கள் கூறிய எதையும் ஏற்காமல், கட்சியை பிளவுபடுத்தும் நோக்கிலேயே பேசினார். இதனால் நாங்கள் வெளியே வந்துவிட்டோம். தொடர்ந்து அவர் அந்த வேலையை செய்து வருகிறார். மக்களும், அதிமுகவினரும் எடப்படியாரை ஏற்றுக்கொண்டு விட்டனர். இவ்வாறு தங்கமணி எம்எல்ஏ பேசினார்.

Related Stories: