புதிய கல்வி கொள்கையை திமுக தொடர்ந்து எதிர்க்கும்: கனிமொழி எம்.பி., பேச்சு

சென்னை:  ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை திமுக தொடர்ந்து எதிர்க்கும் என்று கனிமொழி எம்.பி., பேசினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் திமுக முப்பெரும் விழா ஓட்டேரியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், எம்.பி., கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா, எம்எல்ஏ தாயகம் கவி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர், எம்.பி., கனிமொழி பேசுகையில், ‘‘எல்லோரும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பது தான் திராவிட இயக்கத்தின் நோக்கம். அதை நோக்கி தான் செல்கிறோம். காமராஜரால் மதிய உணவு திட்டம் துவக்கப்பட்டு நம் தலைவர் கலைஞரால் சத்துணவு திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்று நம் தலைவர் முதல்வர், காலையில் சில குடும்பங்களில் உணவு சமைக்க இயலாத நிலையை எண்ணி, குழந்தைகளின் நலனை எண்ணி காலை உணவு திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். பீகாரையோ, உத்தரபிரதேசத்தையோ நாம் திரும்பி பார்த்தால் எங்கோ தொலைவில் உள்ளார். அவர்கள் 30 ஆண்டுகள் கழித்து செய்வோம் என்பதை நாம் இப்போதே தாண்டிவிட்டோம். புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் பயனற்றது. இதனை திமுக அரசு தொடர்ந்து எதிர்க்கும்’’ என்றார்.

Related Stories: