×

பீகாரில் 3,500 கிமீ நடைபயணம் பிரசாந்த் கிஷோர் யாத்திரை தொடக்கம்

பாட்னா: தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் 3,500 கிமீ. பாத யாத்திரையை  பீகாரில் நேற்று துவக்கினார். பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர்,பாஜ உள்ளிட்ட பல கட்சிகளுக்கு பிரசார வியூகங்களை அமைத்துகொடுத்து  தேர்தல் வெற்றியில்  முக்கிய பங்காற்றியுள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் துணை தலைவராக பொறுப்பு வகித்தார். நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பின்னர் அக்கட்சியில் இருந்து பிரசாந்த் நீக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில்  அவர் சேர உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், காங்கிரஸ் அழைப்பை அவர் ஏற்க மறுத்தார்.  பின்னர் அவர், ‘‘மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பிஸ்திஹாவ்ரா காந்தி ஆசிரமத்தில் இருந்து நேற்று தனது பாத யாத்திரையை அவர்  தொடங்கினார். ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக சம்பரான் மாவட்டத்தில்தான் மகாத்மா காந்தி முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தார். ஜன் சூரஜ் என்ற பெயரிலான இந்த  நடைபயணத்தின் போது 15 மாதங்களில் 3,500 கிமீ துாரம் நடந்து செல்கிறார்.  இதுகுறித்து அவர் டிவிட்டரில் பதிவிடுகையில், இந்த நடைபயணத்தின் மூலம் மிகவும் பின்தங்கிய ஏழ்மையான  பீகார் மாநிலத்தின் அரசியல் நடைமுறையை மாற்ற முடியும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Prashant Kishore Yatra ,Bihar , Prashant Kishore Yatra, a 3,500 km trek begins in Bihar
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!