சில்லி பாயின்ட்...

* சாலை பாதுகாப்பு உலக சீரீஸ் டி20 தொடரில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சத்தீஸ்கரின் ராய்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பைனலில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியுடன் மோதிய இந்தியா லெஜண்ட்ஸ் 33 ரன் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தக்கவைத்தது. இந்தியா லெஜண்ட்ஸ் 20 ஓவரில் 195/6 (நமன் ஓஜா 108*); இலங்கை லெஜண்ட்ஸ் 18.5 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல் அவுட். ஓஜா ஆட்ட நாயகன் விருதும், தில்ஷன் (இலங்கை) தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

* சீனாவின் செங்டு நகரில் நடக்கும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 2வது ரேங்க் அணியான ஜெர்மனியுடன் மோதிய இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. நட்சத்திர வீரர் ஜி.சத்தியன் களமிறங்கிய 2 ஒற்றையர் ஆட்டங்களிலும் போராடி வென்றார். அவர் ஜெர்மனியின் டுடா பெனடிக்டை 11-13, 4-11, 11-8, 11-4, 11-9 என்ற செட் கணக்கிலும், டாங் கியுவை 10-12, 7-11, 11-8, 11-8, 11-9 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தினார்.

* ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து, இந்திய தடகள வீரர் ஷிவ்பால் சிங் (27 வயது, ஈட்டி எறிதல்) அக்டோபர் 2025 வரை போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நவ்ஜீத் கவுர் தில்லான், தனலட்சுமி சேகர், எம்.ஆர்.பூவம்மா, கமல்பிரீத் கவுர் ஆகியோரைத் தொடர்ந்து ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய 5வது இந்திய வீரர் ஷிவ்பால் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தோனேசியாவில் நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட வன்முறை, கலவரத்தில் 125 பேர் பலியானது துரதிர்ஷ்டவசமானது. இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஃபிபா தலைவர் கியானி இன்பான்டினோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

Related Stories: