ராகுல், சூரியகுமார் அதிரடி அரை சதம் இந்தியா அபார ரன் குவிப்பு

கவுகாத்தி: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டி20 போட்டியில் கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவின் அதிரை அரை சதத்தால் இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 237 ரன் குவித்தது. பரஸ்பாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் தெம்பா பவுமா முதலில் பந்துவீச முடிவு செய்தார். கே.எல்.ராகுல், கேப்டன் ரோகித் ஷர்மா இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவரில் 96 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது. ரோகித் 43 ரன் எடுத்து (37 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) மகராஜ் சுழலில் ஸ்டப்ஸ் வசம் பிடிபட்டார். 24 பந்தில் அரை சதம் அடித்த ராகுல் 57 ரன் விளாசி (28 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) மகராஜ் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார்.

இதையடுத்து, விராத் கோஹ்லி - சூரியகுமார் இணைந்து தென் ஆப்ரிக்க பந்துவீச்சை பதம் பார்த்தனர். பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு அமர்க்களப்படுத்திய சூரியகுமார் 18 பந்தில் அரை சதம் அடித்து மிரட்டினார். சர்வதேச டி20 போட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் 1000 ரன் மைல்கல்லை எட்டிய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது (573 பந்து). கோஹ்லி - சூரியகுமார் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்தது. சூரியகுமார் 61 ரன் (22 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி, துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். கடைசி கட்டத்தில் கார்த்திக் தன் பங்குக்கு அதிரடி காட்ட, இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 237 ரன் குவித்தது. கோஹ்லி 49 ரன் (28 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), கார்த்திக் 17 ரன்னுடன் (7 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 20 ஓவரில் 238 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது.

Related Stories: