புளோரிடாவை சூறையாடிய புயல் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி; இயான் புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு, அழிவுகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க மக்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா கடற்கரை பகுதி அருகே இயான் புயல் கடந்த புதன்கிழமை மதியம் கரை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. பின்னர், 2வது முறையாக தெற்கு கரோலினா கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை கரையை கடந்தது. புளோரிடாவில் நேற்று முன்தினம் இரவு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் டிவிட்டரில், ``இயான் புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு, அழிவுகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல், இதயப்பூர்வமான அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அமெரிக்க மக்களை நினைவு கூர்கிறேன்,’’ என்று பதிவிட்டுள்ளார். இதனிடையே, இயான் புயலினால் புளோரிடாவில் மட்டும் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்திருப்பதாகவும் இதனால் அமெரிக்கா ஒட்டு மொத்தமும் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: