×

மாநகராட்சி 23வது வார்டில் மழைநீர் கால்வாய் பணி தாமதம்: பருவமழை தொடங்கும் முன் முடிக்க வலியுறுத்தல்

புழல்: மாநகராட்சி 23வது வார்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பருவ மழை நெருங்குவதால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 23வது வார்டு புழல் கன்னடபாளையம் ஜிஎன்டி சாலையிலிருந்து மழைநீர் கால்வாய் கன்னடபாளையம் திருவிக தெரு வழியாக செல்கிறது. இந்த கால்வாயில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வெளியேறாமல் தேங்கியது. இதனால், கழிவுநீர் திரு.வி.க தெரு மற்றும் குறுக்கு தெருக்களில் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது.

இதன் காரணமாக, கொசு தொல்லைகள் அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்தது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் 23வது வார்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள், கால்வாயை சரி செய்ய திருவிக தெரு குறுக்கே பள்ளங்கள் தோண்டினர். ஆனால், ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் பணிகள் முடியாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அந்த வழியாக ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர். பருவமழை காலம் விரைவில் தொடங்க உள்ளதால் கால்வாயை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rainwater canal work delayed in Corporation 23rd ward: Urge to complete before onset of monsoon
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...