பாலீஷ் செய்து விற்க முயன்ற 36 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது

புழல்: தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 36 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்குன்றம் அடுத்த வடகரை ரைஸ் மில் சாலை பகுதியில் உள்ள தனியார் குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று மாலை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் சம்பந்தப்பட்ட குடோனில் சோதனை நடத்தினர். அப்போது, லாரியில் 40 கிலோ எடை கொண்ட 53 மூட்டைகளும், குடோனில் 25 கிலோ எடை கொண்ட 148 மூட்டைகளும் என மொத்தம் 6 டன் ரேஷன் அரிசி பதுக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2வது தெருவை சேர்ந்த விக்னேஷ் (24), சிவாஜி நகர் 1வது தெருவை சேர்ந்த தங்கராஜ் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து லாரிடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இந்த அரிசி பாலிஷ் செய்து கடைகளுக்கு விற்க முயன்றது தெரிய வந்தது. திருவொற்றியூர்: எண்ணூரில் இருந்து வாகனங்கள் மூலம் ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருவொற்றியூர் மண்டல உணவு வழங்கல் உதவி ஆணையர் சுந்தருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், எண்ணூர் சுற்றுவட்டார பகுதியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படி வந்த மினி வேனை மடக்கினர். போலீசாரை பார்த்ததும் நடுரோட்டில் மினி வேனை நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் தப்பினர். மினி வேனை சோதனை செய்தபோது அதில் ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மினிவேனுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிக கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த தண்டல்கழனி பகுதியில் உள்ள அரிசி ஆலை மற்றும் கிடங்கு ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்று, அந்த ஆலை மற்றும் கிடங்கில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவை பாலீஷ் செய்யப்பட்டு வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்காக, பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: