மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிக்க அரசு பள்ளிகளில் மைதானம் அமைத்து தர வேண்டும்: பெற்றோர்கள் வலியுறுத்தல்

புழல்:  தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் பல்வேறு விளையாட்டுகளை உற்சாகப்படுத்துகின்ற வகையில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கால்பந்து, கபடி, கோகோ, ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல விளையாட்டுகள் கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விளையாட்டு திடல்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் விளையாட்டுகளில் போதிய பயிற்சி எடுத்துக் கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம், புழல் கண்ணப்ப சாமி நகர் அரசு உயர் நிலைப்பள்ளி, புழல் அடுத்த லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சோழவரம் ஒன்றியம் ஆத்தூர் அரசு உயர் நிலைப்பள்ளி, ஒரக்காடு அரசு உயர் நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்கு, பயிற்சி எடுப்பதற்கு விளையாட்டு மைதானம் இல்லை. இதனால், அரசு பள்ளிகளில் நடந்து வரும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, விளையாட்டு திடல்கள் இல்லாத அரசு பள்ளிகளுக்கு இடம் தேர்வு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: