ராயபுரம் மண்டலத்தில் முதன்முறையாக பேவர் பிளாக் சாலை: அதிகாரி தகவல்

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார் சாலை, சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. இதில், சிமென்ட் சாலை அமைப்பதால் மின்சார கேபிள் பழுது, குடிநீர், கழிவுநீர் குழாய்கள் பழுதடைந்தால் சரி செய்வது சிரமமாக உள்ளது. இதுபோன்ற காரணங்களுக்காக சாலையை உடைக்கும் நிலை உள்ளது. மேலும், பல இடங்களில் மழைநீர் வெளியேற வசதி இல்லாததால், சாலையில் தேங்கும் நிலை உள்ளது. எனவே, இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, பேவர் பிளாக் சாலை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 52வது வார்டுக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை, லாலா குண்டா, குப்பம்மாள் தெருவில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.

இந்த தெருக்கள் 500 அடி நீளம், 10 அடி அகலம் கொண்டது. தற்போது இந்த தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதித்து சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பேவர் பிளாக் கற்கள் பதித்து சாலைகள் அமைப்பதால் தெருவில் தேங்கும் மழைநீர் பூமிக்குள் சேமிக்க முடியும். மேலும், மின்வயர் பதிப்பது, குடிநீர் குழாய் பதிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக சாலையில் பள்ளம் தோண்டும் போது, பேவர் பிளாக் கற்களை அகற்றிவிட்டு, சேதம் இல்லாமல் விரைந்து சாலையை சீரமைக்க முடியும்.

இதுவே, தார் சாலை, சிமென்ட் சாலையாக இருந்தால், பள்ளம் தோண்டும்போது குண்டும், குழியுமாக மாறி, மீண்டும் சாலை அமைக்க வேண்டி இருக்கும். இதனால், அரசுக்கு வீண் செலவும் ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வாக இந்த பேவர் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக ரூ.3 லட்சம் செலவில் குப்பம்மாள் தெருவில் பேவர் பிளாக் சாலை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளிலும் இந்த பணி விரிவுபடுத்தப்பட உள்ளது,’’ என்றார்.

Related Stories: