தாம்பரம் மாநகராட்சி பகுதியில் வெள்ள தடுப்பு பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் மழைவெள்ள தடுப்பு பணிகளை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஆண்டுதோறும் மழை காலத்தின்போது தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்திற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைவெள்ள தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வெள்ளதடுப்பு கண்காணிப்பு அதிகாரி ஜான் லூயிஸ் தலைமையில், தாம்பரம் மாநகராட்சியில் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் டி.காமராஜ், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், கிழக்கு தாம்பரம், திருவஞ்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெரும் மழைநீர் கால்வாய் பணி, பீர்க்கன்காரணை ஏரி, கிருஷ்ணா நகர் சர்வீஸ் சாலை, டி.டி.கே.நகர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஜான் லூயிஸ்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை மழை துவங்குவதற்கு முன் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: