தண்டையார்பேட்டையில் தரைப்பால சாலை சேதம்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 1வது தெருவில் சிறிய தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக நேதாஜி நகர், இந்திரா காந்தி நகர், கருணாநிதி நகர் ஆகிய பகுதியை சேர்ந்த மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஆம்புலன்ஸ், ரோந்து வாகனம் உள்ளிட்டவையும் இந்த பாலத்தை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.

இந்நிலையில், இந்த பாலத்தின் சாலையில் கான்கிரீட் உடைந்து கம்பி வெளியே தெரிகிறது. இதில் வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் சிறிய பள்ளம் நாளுக்குநாள் பெரிதாகி வருகிறது. மேலும், ஆபத்தான முறையில் தெரியும் கம்பிகள் மீது வாகனங்கள் செல்லும்போது டயர் பஞ்சராகிவிடுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த சேதடைந்த பால சாலையை சீரமைக்க வேண்டும், என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: