தகராறு குறித்து விசாரிக்க சென்ற போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்

அண்ணாநகர்: டி.பி.சத்திரம் அருகே மோதல் குறித்து விசாரிக்க சென்ற போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் நடுரோட்டில் ஒரு வாலிபரை, 2 பேர் சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், டி.பி.சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸ்காரர் இளையராஜா (45) சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வாலிபரை தாக்கிய இருவரை மடக்கி பிடித்து, ‘‘என்ன பிரச்னை’’ என்று கேட்டார்.

அதற்கு அந்த 2 பேரும் முறையாக பதிலளிக்காமல், போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு்ளளனர். இதனால், அவர்களை காவல் நிலையம் வரும்படி அழைத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த 2 பேர், தாங்கள் மறைத்து வைத்திருந்த பீர்பாட்டிலால் போலீஸ்காரர் இளையராஜாவை குத்துவதற்கு முயன்றனர். மேலும், ‘‘நாங்கள் யார் தெரியுமா, பிரபல ரவுடி ரோகித்தின் கூட்டாளிகள். எங்களிடம் அதிகம் பேசக்கூடாது’’ என்று கொலை மிரட்டல் விடுவித்துவிட்டு, அங்கிருந்து பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.

இதுகுறித்து, இளையராஜா கொடுத்த புகாரின்படி, டி.பி.சத்திரம் ஆய்வாளர் சக்திவேலாயுதம் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினார். அதில், போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தது அமைந்தகரை பாரதிநகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் (23), நிலேஷ்குமார் (23) என்பதும், இவர்கள் மீது டி.பி.சத்திரம் காவல்நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: