ஆதாயத்திற்காக ஆர்ப்பாட்டம், முற்றுகை; மறியல் தனியார் இயக்கங்களால் அவதிப்படும் ஆய்வாளர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரம்பூர்: தமிழகத்தில் வீதிக்கு ஒரு கட்சி என்கிற மாதிரி தெருவுக்கு ஒரு அமைப்பு, இயக்கம் செயல்பட தொடங்கிவிட்டது. மக்களுக்காக நன்மை செய்கின்றோம் எனக் கூறி அமைப்பை தொடங்குபவர்கள் எல்லாம் எதனை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். 10 பேர் சேர்ந்தால் ஒரு அமைப்பை தொடங்கி விடலாம், என்ற ரீதியில் அமைப்பை தொடங்கி, அதனை வைத்து பிழைப்பு நடத்தும் படலத்தை பலர் தொடர்ந்து வருகின்றனர். இவ்வாறு அமைப்பை நடத்துகிறவர்கள் யார், அவர்கள் எங்கு வேலை செய்கிறார்கள், அவர்களுக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சமூகத்தில் அரசியல்வாதிகள் யாராவது ஒரு மதத்தை பற்றியோ, ஒரு ஜாதியை பற்றியோ தவறாக பேசி விட்டால் உடனடியாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என்ற பெயரில் வீதிக்கு வந்து விடுவார்கள். அனைத்திற்கும் போராட்டம் நடத்துகிறார்களா என்று பார்த்தால் ஆதாயம் உள்ள போராட்டங்களை மட்டுமே சிலர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு சாதகமாக இல்லாத இன்ஸ்பெக்டர்கள் ஏதாவது ஒரு பிரச்னையில் மாட்டும்போது அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்து தங்களது செல்வாக்கை காட்டுகின்றனர். இவ்வாறு விளம்பரத்திற்காக இவர்கள் செய்யும் செயல்களால் பல நேரங்களில் போலீசார் மட்டும் இல்லாமல் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி  விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ராஜசேகர் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு அமைப்புகள் தலையிட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் உட்பட 5 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு சிபிசிஐடிக்கு  மாற்றப்பட்டனர். அதன்பிறகு பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜசேகர் போலீசார் தாக்கியதால் உயிரிழக்கவில்லை, என  தெரியவந்தது. இருந்த போதிலும் தொடர்ந்து இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 பேர் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளனர்.

இதேபோன்று, போலீஸ் விசாரணைக்கு பயந்து போதை மாத்திரைகளை அதிகமாக உட்கொண்ட ஆகாஷ் என்ற ரவுடி 8 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 3 தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். காவல்துறையினர் ஆகாஷை அடித்து துன்புறுத்தியதாக கூறி சில அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போலீசாரை மிரட்டும் வகையில் செயல்பட்டனர். உயிரிழந்த நபரை  வீட்டுக்கு அனுப்பி வைத்தது முதல் அனைத்தும் முறையாக ஆதாரத்துடன்  உள்ளது என போலீசார் தரப்பில் கூறியபோதும் சிலர் பிரச்னை செய்து வருவதாக போலீசார் வேதனையுடன்  தெரிவிக்கின்றனர். மேலும், இந்த வழக்கும் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் போலீசார் ஒருவித மன உளைச்சலில் உள்ளதாகவும், ரவுடிகளை எவ்வாறு கையாள்வது என்பதில் குழப்பம் அடைந்துள்ளதாகவும், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரவுடிகளை மாலை 6 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் வைக்ககூடாது, அவர்களை கைது செய்யும்போது சட்ட நெறிமுறைகளை கையாள வேண்டும், குடித்திருந்தால் கைது செய்யக்கூடாது என்பதையேல்லாம் முறையாக பின்பற்றினால் ஒரே ஒரு குற்றம் செய்த நபரை கூட போலீசாரால் பிடிக்க முடியாது. பல்வேறு விஷயங்களில் பங்கு வாங்குவதில் மட்டும் மூக்கை நுழைக்கும் உயர் அதிகாரிகள் பிரச்னையென்றால் பொறுப்பு இன்ஸ்பெக்டர்களுக்கு மட்டும்தான் என்று ஒதுங்கிக் கொள்ளும் நிலை மாற வேண்டும்,’’ என்றார். தொடர்ந்து, சென்னை போன்ற பெருநகரங்களில் லெட்டர் பேட் அமைப்புகள், மத ரீதியாக செயல்படும் இயக்கங்கம், ஜாதி ரீதியாக செயல்படும் அமைப்புகள் போன்ற அமைப்புகளால் தொடர்ந்து போலீசார் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதால், இவற்றை தடுக்க போலீஸ் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து காவலர்களின் கோரிக்கையாக உள்ளது.

*கறாராக வசூல்

தங்களது பகுதியில் உள்ள காவல் நிலையங்களை இவர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள  நினைக்கின்றனர். தங்களை தேடி வரும் நபர்களிடம், எந்த பஞ்சாயத்து என்றாலும் கூறுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனக்கூறி காவல் நிலையத்திற்கு  சென்று பஞ்சாயத்து செய்கின்றனர். அதன்பிறகு அவர்களிடமிருந்து ஒரு  குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு போலீசுக்கு இவ்வளவு தர வேண்டும்,  வழக்கறிஞருக்கு இவ்வளவு தர வேண்டும், என கறாராக வசூல் செய்து பணம்  சம்பாதிக்கின்றனர்.

*மக்களுக்கு பாதிப்பு

காவல்  துறை உயர் அதிகாரிகள் கீழ் மட்டத்தில் வேலை செய்யும போலீசாரின்  சங்கடங்களையும் புரிந்து செயல்பட வேண்டும். பிரச்னை ஏற்பட்டால் அது  இன்ஸ்பெக்டருக்கு மட்டும்தான் என்று ஒதுங்கிவிடாமல பிரச்னையை தீர்ப்பதற்கான  வழிமுறைகளை அவர்கள் கையாண்டால் மட்டுமே அடிமட்டத்தில் வேலை செய்யும்  போலீசாரும் பொதுமக்கள் நலன் கருதி நேர்மையாக வேலைசெய்ய முடியும். இல்லை என்றால் கடமைக்கு என்று வேலை செய்துவிட்டு சம்பளம் வந்தால் போதும் என வீட்டிற்கு செல்லும் நிலை வந்துவிடும். அவ்வாறு அந்தநிலை வந்தால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமே என்பதை உயர் அதிகாரிகள் கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும்.

Related Stories: