கலெக்டர் ஆய்வின்போது அம்பலம், கணிதத்தேர்வு விடைகளை போர்டில் எழுதிய ஆசிரியர்; விளக்கம் கேட்டு சிஇஓ உத்தரவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிக்கனஅள்ளியில் மாவட்ட கலெக்டர் சாந்தி கடந்த 28ம் தேதி ஆய்வுக்கு சென்றார். அப்போது மல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் காலாண்டு தேர்வு நடந்து வந்தது. அன்றைய தினம் கணித தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்களிடம் தேர்வு நன்றாக எழுதினீர்களா என கலெக்டர் சாந்தி கேட்டார். நன்றாக எழுதினோம் என கூறிய மாணவர்களிடம் இருந்து வினாத்தாளை வாங்கி கலெக்டர் சாந்தி பார்த்தார். அப்போது அதில் இருந்த கேள்விகளுக்கான பதிலை கலெக்டர் கேட்டபோது மாணவர்கள் பதில் சொல்லாமல் விழித்துக்கொண்டிருந்தனர்.

பதில் தெரியாமல் எவ்வாறு தேர்வை எழுதினீர்கள் என கேட்டபோது, எங்கள் கணித ஆசிரியர் விடைகளை போர்டில் எழுதிப்போட்டார், அதனை பார்த்து நாங்கள் பதில் எழுதினோம் என மாணவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கலெக்டர் சாந்தி, உடனடியாக இதுகுறித்து விசாரிக்கும்படி சிஇஓ குணசேகருக்கு உத்தரவிட்டார். அதன்படி சிஇஓ பள்ளி தலைமையாசிரியரிடம் ஒரு வாரத்தில் விளக்க கடிதம் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: