தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம்

சென்னை: பண்டிகை கால தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை, பண்டிகை காலம் என தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களுக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாவது சீசன் காலமாகும். இந்நிலையில் காலாண்டு தேர்வுகள் நிறைவடைந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிகிழமை முதலே ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருந்ததது. இதனால் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. நகரில் உள்ள ஓட்டல்கள், லாட்ஜ்கள், காட்டேஜ்களில் பெரும்பாலான அறைகள் நிரம்பின. விடுமுறை தினமான நேற்று அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை புரிந்தனர். அதற்கேற்றார் போல் இதமான காலநிலை நிலவியது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் பல ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்திருந்த பல்வேறு வண்ண மலர்களை கொண்டு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சிறப்பு மலர் காட்சியை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். குறிப்பாக ஊட்டி - கூடலூர் சாலையில் அமைந்துள்ள சூட்டிங்மட்டம், ைபக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர். ஆம்னி பஸ்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகள், கேரளாவில் இருந்து வருபவர்கள் ஊட்டி - கூடலூர் சாலை வழியாக ஊட்டி வருகின்றனர். வழியில் ஊசிமலை, பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சி, சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் அந்த வழியாக வர கூடிய சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்திட்டு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கொடைக்கானல்: கொடைக்கானலிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. ஏழு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய அரியவகை சிறு குறிஞ்சி மலர்கள் கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் தற்போது பூத்து குலுங்குகின்றன.   தற்போது கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் 7 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடிய அரிய வகையான சிறு குறிஞ்சி மலர்கள் பூக்க தொடங்கியுள்ளன.  இந்த அரிய வகை மலர்களை பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் உடு மலை அருகே உள்ள   திருமூர்த்தி அணையின் மேல் பகுதியில் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக திருமூர்த்திமலைக்கும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.

குற்றாலம்: தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் நிறைவடைந்த நிலையிலும் அருவிகளில் சிறிதளவு தண்ணீர் விழுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் ஒரு சில அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. மெயின் அருவியில் பெண்கள் பகுதியில் குறைவாகவும், ஆண்கள் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவியில் சிறிதளவு தண்ணீர் விழுகிறது. புலி அருவியில் தண்ணீர் வரத்து நின்றுவிட்டது. இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும், தென்காசி ஆர்.சி. புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா மற்றும் சிஎஸ்ஐ கிறிஸ்தவர்களின் ராக் ஹால் பண்டிகை ஆகியவற்றின் காரணமாக நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

குற்றாலத்தில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் அதையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து, கொட்டும் அருவிகளை உற்சாகத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.  மெயினருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவியை கண்டு களித்தனர். மேலும் குடும்பம், குடும்பமாக படம் எடுத்து மகிழ்ந்தனர். முதலை பண்ணை, மீன் காட்சியகம், தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு பரிசலில் உற்சாகமாக சவாரி செய்தனர்.

Related Stories: