மகாராஷ்டிரா அரசு உத்தரவு ‘ஹலோ’ என்பதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ சொல்லுங்கள் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

மும்பை: ‘மக்கள் தொலைபேசியில் பேசும் போது ‘ஹலோ’ என்பதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ என கூற வேண்டுமென்ற பிரசாரத்தை மகாராஷ்டிரா பாஜ அரசு தொடங்கி உள்ளதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மகாராஷ்டிராவின் பாஜ-சிவசேனா கூட்டணி அரசு வெளியிட்ட அரசு தீர்மானத்தில், ‘மகாராஷ்டிரா அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் தொலைபேசி அழைப்புகளின் போது ‘ஹலோ’ என்பதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ என கூற வேண்டும். துறை தலைவர்கள் தங்களின் ஊழியர்கள் இவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும். ஆனாலும் இது கட்டாயமில்லை’ என கூறப்பட்டுள்ளது.

இந்த பிரசாரத்தை காந்தி பிறந்தநாளையொட்டி, வார்தா மாவட்டத்தில் நடந்த பேரணியில் மாநில கலாச்சார துறை அமைச்சர் சுதிர் நேற்று தொடங்கி வைத்தார். அவர், ‘‘ஹலோ என்பது மேற்கத்திய கலாச்சாரம். எனவே இனி, ஹலோ என சொல்வதற்கு பதிலாக வந்தே மாதரம் என சொல்லுங்கள். வந்தே மாதரம் என சொல்லிக் கொள்வதன் மூலம் பாச உணர்வு அதிகரிக்கும்’’ என மக்களிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சமாஜ்வாடி தலைவர் அபு அஸ்மி அளித்த பேட்டியில், ‘‘மராட்டியர்கள் ‘ஜெய் மகாராஷ்டிரா’ என்பது தான் வழக்கம். வந்தே மாதரம் என கூறுவது பிரித்தாளும் சூழ்ச்சி. இதை ஒருபோதும் நாங்கள் சொல்ல மாட்டோம்’’ என்றார்.

Related Stories: