காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கட்சியை வலுப்படுத்தவே போட்டி; பிரசாரத்தை தொடங்கினார் கார்கே

புதுடெல்லி: ‘‘கட்சியை வலுப்படுத்த வேண்டுமென்பதற்காகவே காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேனே தவிர, யாரையும் எதிர்ப்பதற்காக அல்ல’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் கார்கேவுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், கார்கேவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில், நேற்று அவர் தனது பிரசாரத்தை தொடங்கினார். இதுதொடர்பாக, டெல்லியில் அவர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கட்சியின் மூத்த தலைவர்களும், இளம் தலைவர்களும் என்னை போட்டியிடுமாறு வலியுறுத்தியதால் தான் தேர்தலில் களமிறங்கி உள்ளேன்.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கிறது. மேலும் பாஜவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இந்தநிலையில், கட்சியை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகி உள்ளது. அதற்காகவே தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேன். மற்றபடி யாரையும் எதிர்ப்பதற்காக  களமிறங்கவில்லை. கட்சியில் ஜி23 குழு என எதுவும் இப்போது இல்லை. பாஜ-ஆர்எஸ்எஸ்ஐ எதிர்த்து போராடுவதற்காக கட்சியில் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்பட விரும்புகிறார்கள். அதனால்தான் என்னை அனைத்து தலைவர்களும் ஆதரிக்கின்றனர். இவ்வாறு கார்கே கூறினார்.

Related Stories: