இலவச மின்சார இணைப்பை வேறொருவருக்கு வழங்குவதற்காக விவசாயி இறந்ததாக சான்றளித்த விஏஓக்கள்; 2 பேர் சஸ்பெண்ட் தர்மபுரி கலெக்டர் அதிரடி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கொலசன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (58). இவருக்கு வள்ளி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். விவசாயியான இவருக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் ஊர் அருகே உள்ளது. அதில் துவரை சாகுபடி செய்து வந்தார். இந்நிலையில் விவசாய நிலத்தில் இலவச மின்சாரம் பெறுவதற்கு கடந்த 2004ம் ஆண்டு வெள்ளிச்சந்தை மின்சார வாரியத்தில் விண்ணப்பம் அளித்தார். ஆனால் மின் இணைப்பு வழங்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஜனவரி 7ம் தேதி தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி சுப்பிரமணி மனு அளித்தார். அதில், ‘நான் (சுப்பிரமணி) இறந்துவிட்டதாக போலி இறப்பு சான்று பெற்று எனக்கு வரவேண்டிய மின் இணைப்பை தடுத்து வேறு நபருக்கு அளித்துவிட்டனர்.

இதற்கு உடந்தையாக கொலசனஅள்ளி விஏஓ ராஜேஸ், மற்றொரு விஏஓ வெங்கடேசன் இருந்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி, பாலக்கோடு கொலசனஅள்ளி விவசாயி சுப்பிரமணி, இறந்ததாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து, இலவச மின் இணைப்பை தடுத்துவிட்டனர். அவர் உயிருடன் உள்ளார்.

இறப்பு சான்று அளித்த விஏஓக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு கலெக்டர் சாந்தி கூறுகையில், போலி இறப்பு சான்று அளித்த விஏஓ ராஜேஸ், அதற்கு உடந்தையாக இருந்த மற்றொரு விஏ வெங்கடேசன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். இதைத்தொடர்ந்து விவசாயி சுப்பிரமணிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

Related Stories: