போலீசார் மீது குற்றம் சாட்டி பெண் தூக்கிட்டு தற்கொலை; எஸ்ஐ உள்பட 6 பேர் மீது வழக்கு

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன், இவரது மனைவி கோகிலா(35). இவருக்கும், பக்கத்தில் வீட்டை சேர்ந்த கண்ணையாவுக்கும் வீட்டு பாதை தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. கண்ணையா புகாரின்படி கீரமங்கலம் போலீசார் கோகிலாவை கைது செய்தனர். இதையடுத்து அவர் நிபந்தனை ஜாமீன் பெற்று தினமும் போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை கோகிலா அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த இடம் அருகே ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில் எனது சாவிற்கு காரணம் மேற்பனைக்காடு குமார், அவரது மனைவியும் போலீசுமான புவனேஸ்வரி மற்றும் என்னை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையம் இழுத்து சென்று சிறைக்கு அனுப்ப காரணமாக இருந்த கீரமங்கலம் எஸ்ஐ ஜெயக்குமார், பெண் போலீஸ் கிரேசி ஆகியோர் தான் என்று எழுதி இருந்தது.

இதையடுத்து உறவினர்கள் மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தில் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குரிய வீட்டு பாதை அகற்றப்பட்டது. இதுதொடர்பாக கோகிலாவின் கணவர் நீலகண்டன் அளித்த புகாரில், கடந்த மாதம் 20ம் தேதி அதிகாலை எனது மனைவியை கீரமங்கலம் போலீசார் வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையம் இழுத்துச் சென்றனர். இதனால் மனஉளைச்சலில் இருந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் என் மனைவி மீது வழக்குப்பதிவு செய்ய தூண்டிய குமார், புவனேஸ்வரி, காமராஜ், துரைமாணிக்கம் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைதொடர்ந்து எஸ்ஐ ஜெயக்குமார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது.

Related Stories: