ஆம்பூர் அருகே விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ டிரைவரை காப்பாற்ற முயன்ற 2 வாலிபர்கள் லாரி மோதி நசுங்கி பலி; 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஆம்பூர்: வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த பொய்கையை சேர்ந்தவர் வினோத்குமார் (34), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று அதிகாலை 1 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போதையில் ஆட்டோ ஓட்டியபடி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சீனிவாசபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் வினோத்குமார் படுகாயமடைந்தார்.

அப்போது வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து ஒசூருக்கு லாரியில் கோழி தீவனம் ஏற்றி சென்ற காட்பாடி அடுத்த மேல்மாயிலை சேர்ந்த அண்ணன், தம்பியான டிரைவர் சரவணன்(35), சுந்தரமூர்த்தி(33) மற்றும் வேலூருக்கு லாரியில் சென்ற திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த லாடாவரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராஜா(25), கிளீனர் தவகிருஷ்ணன்(23), பைக்கில் வந்த சீனிவாசன் ஆகியோர் வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு, படுகாயமடைந்த ஆட்டோ டிரைவரை காப்பாற்ற முயன்றனர்.

இந்நிலையில் வேலூரில் இருந்து ஆம்பூருக்கு இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி, அவர்கள் 5 பேர் மீதும் மோதியது. இதில் லாரி டிரைவர்களான ராஜா, சரவணன் ஆகிய இருவரும் அங்கேயே உடல் நசுங்கி பலியாகினர். மற்ற 3 பேரும் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடுகின்றனர்.

Related Stories: