புதுச்சேரியில் போராட்டம் நடத்திவரும் மின்துறை ஊழியர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு; எஸ்மா சட்டம் பாயும் என கவர்னர் எச்சரிக்கை

புதுச்சேரி: மின்துறை ஊழியர்கள் செயற்கை மின்வெட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என புதுவை கவர்னர் தமிழிசை எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி மின்துறையை தனியார்  மயமாக்குவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்து, கடந்த சில தினங்களுக்கு முன்  டெண்டர் வெளியிட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி, காரைக்கால், மாகே,  ஏனாமில் பணிபுரியும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள், மின்துறை  ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்றுமுன்தினம் மாலை துணை  மின் நிலையங்களுக்குள் புகுந்து மின்துறை ஊழியர்கள் செயற்கையாக மின்  விநியோகத்தை துண்டித்துவிட்டனர். இதனால் புதுவை முழுவதும் இருளில்  மூழ்கியது. 5 மணி நேரத்துக்கு மேலாக நீடித்து மின்வெட்டால் பொதுமக்கள்  சிரமத்திற்குள்ளாயினர். ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை  மற்றும் ஊழியர்கள் உதவியுடன் துணை மின் நிலையங்களில் பிரச்னை சரி செய்யப்பட்டு படிப்படியாக மின் விநியோகம் சீரானது.  

வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, ஏம்பலம், திருபுவனை உள்ளிட்ட பகுதியில் கேபிள் வயர்களை கட் செய்ததாலும், பச்சைக்கழிகளை மின்சார லைனில் வீசியதாலும் இதனை கண்டறிந்து சரி செய்வதில் கடும் சவால் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மீண்டும் உள்ளே நுழையாதபடி துணை மின் நிலையங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதலியார்பேட்டை, சேதராப்பட்டு காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் மயத்தை கண்டித்து 5வது நாளாக நேற்றும் ஸ்டிரைக் நீடித்தது. இதற்கிடையே போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், மின்துறை ஊழியர்களுக்கு என்ன கோரிக்கை வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்காக பீஸ் கேரியரை பிடுங்குகிறேன், லைனை துண்டிக்கிறேன் என்று செயற்கையாக மின்வெட்டில் ஈடுபட்டால் மின் ஊழியர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அத்தியாவசிய சேவைக்கு இடையூறு செய்தால் அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும். மின்துறை தனியார் மயத்தால் மக்கள் பலனடைய போகிறார்கள். இடையூறு செய்வது யாராக இருந்தாலும் அதனை பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால் நேற்று(நேற்றுமுன்தினம்) நடந்த அத்தனை சம்பவங்களும் மின்ஊழியர்கள் திட்டமிட்டு விஷமத்தனமாக செய்ததுதான். இதில் உள்நோக்கம் உள்ளது. மின்வெட்டை சீராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுவைக்கு துணை ராணுவ படை வருகிறது என்றார்.

Related Stories: