கீழடியில் நடைபெற்று வந்த 8ம் கட்ட அகழாய்வு நிறைவு

திருப்புவனம்: கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்தன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் மூன்று கட்டங்களாக அகழாய்வு நடந்தது. இதன்பிறகு நான்கு, ஐந்து, ஆறு, ஏழாம் கட்ட அகழாய்வுகள் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்தன. பிப். 13ம் தேதி தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. இதேபோல் அகரம், கொந்தகையிலும் அகழாய்வுப்பணிகள் தொடங்கி நடந்து வந்தது.

ஜனவரியில்  அகழாய்வு பணிகள் துவங்குவதும், செப்டம்பரில் நிறைவு பெறுவதும் வழக்கம். அதன்படி நேற்று முன்தினத்துடன் அகழாய்வு பணிகள் நிறைவடைந்தன. இதுவரை மூன்று தளங்களிலும் 20 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் நீள் வடிவ தாயக்கட்டை, இரு வண்ண பானைகள், இரும்பு பொருட்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அடுத்தக்கட்ட அகழாய்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அகழாய்வு தளங்கள் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளன.

Related Stories: