காவலர்களின் உறவை பலப்படுத்தும் வகையில் கூடுவோம், கொண்டாடுவோம் கலை நிகழ்ச்சி; காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பங்கேற்பு

சென்னை: காவலர்களின் உறவை பலப்படுத்தும் வகையில் கூடுவோம், கொண்டாடுவோம் கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கினார். சென்னை  காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து விளையாட்டு நிகழ்ச்சிகள், போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் கண்டுகளித்து மகிழ்ச்சியுடன் செலவழிக்கவும், உயரதிகாரிகளிடம் தங்கள் தேவைகளை எடுத்து கூறி, மகிழ்ச்சியுடன் பணிபுரியவும், ஒரு நாள் சிறப்பு நிகழ்ச்சி நடத்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

அதன்பேரில், சென்னை காவல் மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கு பெறும் கூடுவோம், கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.

 அந்த வகையில், கடந்த செப்.19ம் தேதி முதல், மேற்கு மண்டலம், அண்ணாநகர், கோயம்பேடு மற்றும் கொளத்தூர் மாவட்டத்தில் சமையல், ரங்கோலி, இசை நாற்காலி போட்டிகள், குழந்தைகளுக்கென கட்டுரை போட்டிகள் உள்பட பல போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை, வானகரத்தில், கூடுவோம் கொண்டாடுவோம் என்ற சிறப்பு நிகழ்ச்சியினை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். பின்னர் கடந்த சில நாட்களாக போலீசார் குடும்பத்தினருக்கு நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பின்னர் அங்கு நடந்த குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். மேலும், இது போல மற்ற 3 மண்டலங்களிலும் காவல் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: