பி.டெக் படிக்க கட்டாயப்படுத்தியதால் மாணவர் தற்கொலை; மாணவனின் உருக்கமான கடிதம் சிக்கியது

சென்னை: விருப்பம் இல்லாத பி.டெக் படிப்பை கட்டாயப்படுத்தி படிக்க சொன்னதால் விரக்தியடைந்த தனியார் கல்லூரி மாணவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்  தனியார் கல்லூரியில், மத்தியபிரதேசம் மாநிலம்  சோங்காப்பூர் பகுதியை சேர்ந்த முகுலுவிஸ்வநாத் (18) என்பவர் பி.டெக் முதலாமாண்டு படித்து வந்தார். இதற்காக அதே கல்லூரியின் மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தார்.

நேற்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை இரவே முகுலு விஸ்வநாத்துடன் விடுதியில் தங்கியிருந்த சக மாணவர்கள் ஊருக்கு சென்று விட்டனர். முகுலுவிஸ்வநாத் மட்டும்  விடுதி அறையில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், முகுலுவிஸ்வநாத் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது முகுலுவிஸ்வநாத்  மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து ெகாண்டுள்ளார்.

இந்நிலையில், மாணவர் முகுலுவிஸ்வநாத் தங்கியிருந்த அறையில் இருந்து பெற்றோருக்கு எழுதிய உருக்கமான கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில்,‘பிடெக் படிப்பை என்னை கட்டாயப்படுத்தி படிக்க  வைத்துள்ளீர்கள். பிடெக் படிக்க எனக்கு விருப்பம் இல்லை. அது எனக்கு புரியவுமில்லை. எனது விருப்பத்துக்கு மாறாக என்னை கட்டாயப் படுத்தியதால், எனக்கு வாழ விருப்பமில்லை. அதனால் என்னுடைய சாவிலாவது முடிவை நானே தேடிக்கொள்கிறேன்.எனது சாவிற்கு நானே காரணம்’’ என எழுதியுள்ளார்.

தகவலறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 5ஆண்டுகளில் இந்த கல்லூரியில் பயின்ற மாணவர்கள் 15க்கும் மேற்பட்டோர்  மர்மமான முறையில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: