நாளை ஆயுத பூஜை கொண்டாட்டம்; பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்: பூ, பழங்கள் விலை கடும் உயர்வு

சென்னை: ஆயுத பூஜையொட்டி நேற்று பூஜை பொருட்கள் வாங்க சென்னையில் கூட்டம் அலைமோதியது. மேலும் பூ, பழங்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

நவராத்திரி விழா அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையும், பத்தாவது நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கடவுளுக்கு பழங்கள், பூக்கள், பொரி போன்ற ெபாருட்கள் வைத்து வழிபடுவது வழக்கம்.

இதற்காக சென்னையில் மயிலாப்பூர், புரசைவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் விற்பனை நேற்று முதலே களை கட்ட தொடங்கியது. சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர், புரசைவாக்கம், கோயம்பேட்டில் பொருட்களை வாங்க நேற்று காலை முதல் மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. மாலையில் மேலும் விற்பனை விறுவிறுப்படைந்தது. இன்று மேலும் விற்பனை சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. ஆயுத பூஜை என்பதால் பழங்கள், பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. அதாவது, கடந்த வாரம் ஆப்பிள்(1 கிலோ) ரூ.80 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது. இது நேற்று ரூ.100 முதல் ரூ.180 வரை தரத்துக்கு ஏற்றாற்போல் விற்கப்பட்டது.

ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்பட்ட சாத்துக்குடி ரூ.50 முதல் ரூ.60 வரையும் விற்கப்பட்டது. இதே போல, கொய்யாப்பழம், மாதுளம்பழம், அன்னாசி பழம் உள்ளிட்ட அனைத்து பழங்களும் கிலோவுக்கு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகமாக விற்கப்பட்டது.இதே போல, பொரி ஒரு படி ரூ.30, உடைத்த கடலை கிலோ ரூ.50, அவல் சிறிய ரகம் கிலோ ரூ.100, வாழைக்கன்று இரண்டு ரூ.30, மாவிலை தோரணம் இரண்டு ரூ.10, வெள்ளை பூசணி ரூ.100 முதல் ரூ. 300 வரை, தென்னை மட்டை தோரணம் இரண்டு ரூ.20, மஞ்சள் வாழை ஒரு தார் ஒன்று ரூ.200 முதல் ரூ.300 வரையும் விற்கப்பட்டது.

பூக்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. அனைத்து பூஜை பொருட்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. விலை அதிகரித்த போதிலும், விலையை பற்றி கவலைப்படாமல் பொருட்களை பொதுமக்கள் வாங்கினர். மேலும், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் குறைந்த அளவில் பொருட்களை வாங்கியதையும் காண முடிந்தது.

Related Stories: