தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் ரூ.175 கோடி விற்பனை; இலக்கு அமெட் பல்கலை. நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி தகவல்

சென்னை: தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறித் துறையின் கீழ் நெசவுப் பணி செய்யும் நெசவாளர்களுக்கு உதவும் வகையில், கைத்தறி துணிகள் மற்றும் பொருட்களை ரூ.1 கோடிக்கு, காந்தியடிகள் பிறந்த நாளில் விற்பனை செய்ய அமெட் பல்கலையின் 4000 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் கலைஞர் கருணாநிதி சாலை மற்றும் ராஜிவ் காந்தி சாலை பகுதிகளில் வீடு வீடாக சென்று விற்க இலக்கு நிர்ணயித்தனர். இந்த சமூக சேவை திட்டத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேற்று அமெட் பல்கலைக்கழக வளாகத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பிறகுஅமைச்சர் காந்தி பேசியதாவது: நெசவாளர்கள், கைவினைஞர்களின் நலன் காக்கும் இந்த திட்டத்தில் நமது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து இப்பல்கலையில் படிப்பதுடன் தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள மாணவர்களின் முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

கோ-ஆப்டெக்சில் விற்பனை அதிகாரிக்க, ஷோரூம்கள் புதுப்பித்தல், பணியாளர்களுக்கு பயிற்சி, ஆன்லைன் விற்பனை, புதிய டிசைன் அறிமுகம், விளம்பரம் செய்ததன் மூலம் கடந்த ஆண்டு கோஆப்டெக்சில் ரூ.155 கோடிக்கு விற்பனையானது. இந்த ஆண்டு இதுவரை ரூ.55 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனை இலக்காக ரூ.175 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காதி துறையிலும் புதிய வகை எம்ப்ராய்டிரீ மற்றும் பிரிண்ட்டு பட்டு புடவைகள் , புதிய சோப்புகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய வகைகள் விற்பனை  இலக்கு இந்த ஆண்டு ரூ.60 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இத்திட்டத்தின் தொடக்க விழாவில் அமெட் பல்கலை கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் நாசே ராமச்சந்திரன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறையின் அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், அமெட் பல்கலை துணைவேந்தர் திருவாசகம், கைத்தறித் துறையின் ஆணையர் ராஜேஷ்,  உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: