உயிர்நீர் இயக்க திட்டத்தில் சிறப்பான செயல்பாடு இந்தியாவிலேயே தமிழகத்துக்கு முதல் விருது; டெல்லி விழாவில் ஜனாதிபதியிடம் இருந்து அமைச்சர் கே.என்.நேரு பெற்றார்

சென்னை: உயிர்நீர்  இயக்க திட்ட செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக, இந்தியாவிலேயே தமிழகத்துக்கு முதல் விருது கிடைத்துள்ளது. இந்த விருதினை டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி முர்முவிடம் இருந்து அமைச்சர் கே.என்.நேரு நேற்று பெற்று கொண்டார். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின்  சீரிய ஆலோசனைகளின்படி தமிழ்நாட்டில் உயிர் நீர் இயக்கம் சிறப்பாக  செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள 124.93 லட்சம்  வீடுகளில் இதுவரை  69.14 லட்சம் வீடுகளுக்கு (55%) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது உயிர் நீர் இயக்க  திட்டத்தின் கீழ் ரூ.18,000 கோடி அளவிற்கு 42 புதிய குடிநீர்  திட்டங்களும், 56 குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன.

உயிர்நீர் இயக்க திட்டத்தின் கீழ் 60%  குறைவான குழாய் இணைப்புகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டு, கிராமப் புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கி வருவதற்கு தமிழக அரசு முதல் பரிசு பெற்றுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது. விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று விருதினை வழங்கினார். தமிழக அரசின் சார்பில் விருதினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் உயிர்நீர் இயக்க  மாநில பொறுப்பு அலுவலர் சிவ்தாஸ் மீனா, உயிர்நீர் இயக்க மாநில திட்ட இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் பொன்னையா உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: