காவிரி, கொள்ளிடம், வெள்ளாற்றின் குறுக்கே ரூ.2,400 கோடியில் தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்க வேண்டும்; ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர் நேரு வலியுறுத்தல்

சென்னை: காவிரி, கொள்ளிடம் மற்றும் வெள்ளாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே 5 இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ள இடங்களின் அருகில் தடுப்பணைகள்  கட்டுவதற்கு ரூ.2,400 கோடி சிறப்பு நிதி  ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை நேரில் சந்தித்து அமைச்சர் நேரு நேற்று வலியுறுத்தினார். தமிழக நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு டெல்லியில் ஒன்றிய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை நேற்று சந்தித்து பேசினார். அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார்.

சந்திப்பின் போது அமைச்சர் கே.என்.நேரு ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கூட்டுக் குடிநீர் திட்டங்களின் நீடித்த நிலைத் தன்மையை உறுதி செய்ய, காவிரி, கொள்ளிடம் மற்றும் வெள்ளாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே 5 இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் உள்ள இடங்களின் அருகில் தடுப்பணைகள் கட்டுவதற்கு உயிர் நீர் இயக்க திட்டத்தில், ரூ.2,400 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பில் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களை சிறப்பாக பராமரித்து தானியங்கு முறையில் இயந்திரங்களை நிறுவி விரைவாக குடிநீர் வழங்குவதற்கு, ரூ.500 கோடி நிதி ஒதுக்க வேண்டும். மழைக் காலங்களில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் பொருட்டு, அதனை பயன்படுத்தி அருகில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை நிரப்புவதற்கு திட்டங்கள் செயல்படுத்த, ரூ.700 கோடி நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: