ஒன்றிய அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு; தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தரும் தகவலை புறக்கணிக்காதீர்

புதுடெல்லி: ‘தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளிக்கும் தகவல்களை புறக்கணிக்க வேண்டாம்’ என்று அனைத்து ஒன்றிய அமைச்சகங்களுக்கும் பிரதமர் மோடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த வாரம் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனைகளின் போது பல்வேறு ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன. இதை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து ஒன்றிய துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர். 5 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, பொருளாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘எந்த ஒரு கொள்கையை வகுக்கும்போதும் அதை நாட்டின் பாதுகாப்பு அம்சங்களில் இருந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். தேசிய பாதுகாப்பு கவுன்சில் அளித்த குறிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத சம்பவங்களும் நடந்து இருக்கின்றன. மாறி வரும் காலங்களுக்கு ஏற்ப புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

 

நான் குஜராத் முதல்வராக இருந்த போது அமைச்சகம் சம்பந்தமான சில விதிகள் வேறு ஒரு மாநிலத்தின் பெயரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது பற்றி அதிகாரிகளிடம் சொன்னவுடன் அது மாற்றப்பட்டது. கொள்கைகள் வகுப்பது, அதை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டுவது தவிர்க்கப்பட வேண்டும்.

மருந்துகள் தயாரிப்பதற்கான மூல பொருட்கள் இறக்குமதியில் அன்னிய நாடுகளை இந்தியா சார்ந்து உள்ளது. இது சம்பந்தமாக பல ஆண்டுகளுக்கு முன்பே தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளிக்கும் தகவல்களை புறக்கணிக்க வேண்டாம். கொடுக்கப்படும் தகவல்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த தகவலின் பின்னணியை பார்க்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி, அனைத்து ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Related Stories: