×

கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் மோதல்; நெரிசலில் சிக்கி 125 பேர் பலி: இந்தோனேசியாவில் பயங்கரம்

மலாங்: இந்தோனேசியாவில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 125 ரசிகர்கள் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில் அரேமா எப்சி அணியும், பெர்செபயா சுரபயா அணியும் மோதின. இப்போட்டியை காண சுமார் 42,000 ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர்  அரேமா எப்சி அணி ரசிகர்கள். ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாலும், அரேமா அணி உள்ளூரில் விளையாடுவதாலும், அசம்பாவிதங்களை தவிர்க்க பெர்செபயா  ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பெர்செபயா ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

இப்போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் பெர்செபயா அணி வெற்றி பெற்றது. அரெமா எப்சி அணி தோல்வி அடைந்ததால், ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்து, பெர்செபயா அணி ரசிகர்களை தாக்கத் தொடங்கினர். பதிலுக்கு பெர்செபயா அணி ரசிகர்களும் மைதானத்துக்குள் புகுந்து தாக்கியதால் மைதானமே கலவர பூமியாக மாறியது. இதை கட்டுப்படுத்த ரசிகர்கள்  மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால், அனைவரும் தப்பி வெளியேற முயற்சித்தனர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் கீழே விழுந்து மிதிப்பட்டு மயங்கினர். பலருக்கு  மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மோதல் உக்கிரமடைந்ததை தொடர்ந்து, மைதானத்தில் நிறுத்தப்பட்ட போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இருதரப்பு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். போலீசாரும், கால்பந்து வீரர்களும் தாக்கப்பட்டனர். இதில், 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 34 பேர் மைதானத்திலேயே இறந்தனர். மொத்தம் 174 பேர் இறந்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், பின்னர் 125 மட்டுமே பலியானதாக அதிகாரிகள் உறுதி செய்தனர். 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் குழந்தைகளும் பலர் அடங்குவர். இவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதில், 11 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தகவலறிந்து உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்து உள்ளனர்.

உயிரிழந்தவர்கள் உடலை அடையாளம் காட்டி உறவினர்கள் கண்ணீர்விட்டு அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. இச்சம்பவம் விளையாட்டு உலகில் மிகமோசமான சம்பவமாக கருதப்படுகிறது. அதிபர் இரங்கல் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ கூறுகையில், ‘‘இந்த சோகத்திற்கு நான் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். இது இந்த நாட்டின் கடைசி கால்பந்து சோகம் என்று நான் நம்புகிறேன். எதிர்காலத்தில் இது போன்ற மற்றொரு மனித சோகம் நடக்க வேண்டாம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

Tags : Football Stadium ,Indonesia , Fans Clash at Football Stadium; 125 killed in traffic jam: Terror in Indonesia
× RELATED இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி